Popular Post

Posted by : Unknown December 05, 2013

“இப்போதும் சூர்யா என் நண்பன்தான்!”

December 5, 2013
‘இயக்குநர் கௌதம் மேனன் அவர்களிடம் இருந்து, நடிகனாக எனக்குத் திருப்தி அளிக்கும் முழுக் கதை கிடைக்கும் என்று காத்திருந்தேன். ஆனால், ஒரு வருட காலம் கழிந்த பிறகும், கௌதம் அவர்கள் இன்னும் என்னிடம் முழுக் கதையைத் திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை. இனி நாங்கள் இருவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்காக இணைந்து பணியாற்ற இயலாது!’ – பொதுவாக தன் பட இயக்குநர்கள் பற்றி ‘குட் புக்’ குறிப்பு கள் மட்டுமே வாசிக்கும் சூர்யா, இப்படி கௌதம் மேனன் பற்றி சில வாரங்களுக்கு முன் அளித்திருந்த அறிக்கையின் சில வரிகள் இவை!
அந்த அறிக்கைக்கு கௌதமிடம் இருந்து இப்போது வரை ஒரு வார்த்தை பதில்கூட இல்லை. ஆனால், சிம்பு நடிக்கும் ஒரு படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார். தொடர்ந்து அடுத்த படத்துக்கு அஜித் கால்ஷீட் வாங்கிவிட்டார் என்று பரபரக்கின்றன செய்திகள்.

”என்னதான் நடக்கிறது?” என்று கௌதம் மேனனிடம் கேட்டேன். கிரீன் டீ கோப்பையை கையில் உருட்டியபடியே நிதானமாகப் பேசத் தொடங்கினார் கௌதம்.
”இதுக்கு என்ன பதில் சொல்லலாம்னு யோசிச்சா, எதுவுமே தோணலை. எங்கே தப்பு, என்ன நடந்துச்சுனு புரியலை. ம்… இந்தக் கேள்விக்கான பதிலை அப்புறம் சொல்றேன்… அதுக்குள்ள மத்த விஷயங்களைப் பேசிக்கலாம்!” என்று வசதியாக அமர்ந்துகொள்கிறார்.



”இப்போ சிம்புவை வைத்து நீங்கள் இயக்கும் படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வின் இரண்டாம் பாகமா?”
”இல்லை… அந்தப் படத்துக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. இது வேற கதை. ஒரு காதல், அதனால் வரும் பிரச்னை, தொடரும் ஆக்ஷன்னு பக்கா கமர்ஷியல் பேக்கேஜ். அதுக்கு நடுவில் ஒரு சின்ன அலெர்ட் மெசேஜ் இருக்கும்.சூர்யா படம் டிராப் ஆனதா அறிக்கை வந்த ராத்திரி, சிம்புவுக்கு போன் பண்ணேன். ‘பிரதர் ரெண்டு, மூணு ஸ்கிரிப்ட் இருக்கு. கேக்கிறீங்களா?’னு கேட்டேன். ‘கதை சொல்லணும்னு அவசியம் இல்லை… என்னைக்கு ஷூட்னு சொல்லுங்க. வந்துடுறேன்’னு சொன்னார். ஆனாலும் அவரை சந்திச்சு, ‘இதுதான் கதை’னு சொன்னேன். ‘ரொம்பப் பிடிச்சிருக்கு பிரதர். உடனே பண்ணலாம்’னு சொன்னார். பாண்டிராஜ் படத்துக்கு நடுவில் டேட்ஸ் எடுத்து என் படத்தில் நடிச்சிட் டிருக்கார் சிம்பு. இதுக்கு சம்மதிச்சதுக்காக, நன்றி பாண்டிராஜ்!”
” ‘சூர்யாவுடன் படம் டிராப்’… இந்தச் செய்தியை ஓவர்டேக் பண்ணத்தான் அவசர அவசரமா அஜித், சிம்புனு படங்கள் பண்றீங்களா?”
”நிச்சயமா இல்லை! சிம்புவுடன் ‘விடிவி’ இரண்டாம் பாகத்துக்காக அடிக்கடி பேசிட்டே இருந்தேன். அந்த ஃப்ளோவில் இப்போ இந்தப் படம் பண்றோம். சிம்பு, செமத்தியான பெர்ஃபார்மர். நல்ல நல்ல ஸ்கிரிப்ட் பிடிச்சார்னா சவுத்ல அவர்தான் ரன்பீர் கபூர்! ஹீரோயின் பல்லவி, சூப்பர்ப் ஆர்ட்டிஸ்ட். நிறைய மராத்தி படங்கள், விளம்பரங்கள் பண்ணவங்க. ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்காக டான் மேக் ஆர்த்தர்னு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரை ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன். அவரையே சிம்பு நடிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு பண்ண வெச்சுட்டோம். அவரோட லைட்டிங் ஸ்கீம், ஃப்ரேம்ஸ் எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்கும். மற்றபடி, ராஜீவன், ஆண்டனினு என் முதல் படத்தில் இருந்து டிராவல் பண்ணும் அதே கலைஞர்கள்தான்.
ரஹ்மான் சார்தான் படத்துக்கு மியூசிக். இப்பதான் இதை அதிகாரபூர்வமாச் சொல்றேன். லாஸ் ஏஞ்சலஸ்ல இருந்து ஒரு பாட்டுக்கான ட்யூன் அனுப்பிட்டார். பாட்டு எழுதி ரிக்கார்டிங் பண்ணியாச்சு. எல்லாமே நல்ல விதமா அமைஞ்சிருக்கு. இந்தப் படத்துக்கு பேர் மட்டும் இன்னும் ஃபிக்ஸ் பண்ணலை!
அப்புறம்… ஒவ்வொரு படம் முடிச்சதும் அடுத்து அஜித் சார் படம் பண்ணணும்னுதான் நினைப்பேன். அவர்கிட்டயும் இதை நான் சொல்லியிருக்கேன். ஆனா, அதுக்கான நேரமே அமையலை. சூர்யா புராஜெக்ட் டிராப் ஆன ரெண்டாவது நாள்ல, ‘நீங்களும் தயாரிப்பாளர் ரத்னம் சாரும் சந்திக்க நேரம், இடம் ஃபிக்ஸ் பண்ணச் சொன்னார் அஜித் சார்’னு அவரோட மேனேஜர் சொன்னார். நான் அஜித் சாரைச் சந்திச்சேன். ‘கௌதம், இந்தத் தடவை மிஸ் பண்ணக் கூடாது. கண்டிப்பா பெரிய புராஜெக்ட்டாப் பண்றோம்’னு சொன்னார். இன்டெலிஜென்ட் ஆக்ஷன் ப்ளஸ் காதல் கலந்த கதை. பிப்ரவரி 15-ல் இருந்து டேட்ஸ் தந்திருக்கார். ஒரே ஷெட்யூல்ல முடிச்சிடுவோம்!”


”சூர்யா அறிக்கைக்குப் பிறகு நடந்த எல்லா விஷயமும் சொல்லிட்டீங்க… அதுக்கு முன்னாடி என்னதான் நடந்தது?”
”முதல்ல நான் ஒரு கதை சொன்னேன். ‘வேற ஸ்கிரிப்ட் போலாமே’னு சொன்னார் சூர்யா. ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’னு இன்னொரு ஸ்கிரிப்ட் சொன்னேன். அதுவும் வேண்டாம்னு சொல்லிட்டார். ‘அப்ப ‘துருவ நட்சத்திரம்’தான் அடுத்து நான் பண்ற படமா எனக்குத் தெரியுது சூர்யா’னு சொன்னேன். ‘ஓ.கே.’னு அவர் சம்மதிச்ச பிறகே வேலைகளை ஆரம்பிச்சோம். ரஹ்மான் சார் மியூசிக், த்ரிஷா ஹீரோயின், பார்த்திபன், அருண் விஜய்னு எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி படப்பிடிப்புத் தேதியும் முடிவு பண்ணோம்.
ஆனா, படப்பிடிப்பு அன்னைக்கு காலையில், ‘எனக்கு இது வேண்டாம்’னு சொல்லிட்டார். அதுவும் போக கடந்த ஒரு வருஷமா, ‘ஏன் இது, ஏன் அது’னு நிறையக் கேள்விகள். முதல்ல அவரோட அறிக்கை என்னை ரொம்ப அப்செட் ஆக்கினது. ஆனா, ஒருவிதத்தில் கொஞ்சம் ரிலீஃபாகவும் இருந்தது. ‘அப்பாடா’னு நிம்மதி கொடுத்துச்சு அந்த அறிக்கை.
‘என்ன பிரச்னை… ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாச்சே?’னு ஏகப்பட்ட விசாரிப்புகள். ஆனா, ‘என்ன நடந்துச்சு’னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும்னு அமைதியாகிட்டேன். என்ன ஒண்ணு, ‘துருவ நட்சத்திரம்’க்காக வாங்கிவெச்சிருந்த ரஹ்மான் சார் டேட்ஸ் அத்தனையும் வீணாப்போச்சு. ஆனா, இப்போ அவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும், சிம்பு நடிக்கும் படத்துக்கு நான் கதை சொன்னதும் ட்யூன் அனுப்பிட்டார். இங்கே ரொம்ப நல்லவங்களும் இருக்காங்கனு நினைச்சுக்கிட்டேன்!”
”அந்த அறிக்கை சம்பந்தமா சூர்யாகிட்ட நீங்க எதுவும் பேசலையா?”
”நேர்லயே போய் சந்திச்சேன். ‘எதுவா இருந்தாலும் நாம ரெண்டு பேர் மட்டுமே பேசி முடிவெடுத்திருக்கலாமே… அறிக்கையெல்லாம் எதுக்கு?’னு கேட்டுட்டு கை குலுக்கிட்டு வந்துட் டேன். அப்புறம் அவர் வீட்ல நடந்த ஒரு விசேஷத்துக்கு என்னை இன்வைட் பண்ணியிருந்தார். ஆனா, ஷூட்டிங் பரபரப்பில் என்னால் கலந்துக்க முடியலை. என்ன நடந்தாலும்… இப்பவும் எப்பவும் சூர்யா என் நண்பன்தான்!”
”சமீபத்தில் பார்த்ததில் பிடித்த தமிழ் சினிமாக்கள்?”
”எதுவுமே இல்லை! ‘சூது கவ்வும்’ மாதிரி சில படங்கள் பிடிச்சிருந்தன. ஆனா, ‘சுப்ரமணியபுரம்’ பார்த்துட்டு சசிகுமாருக்கு போன் பண்ணி சிலாகிச்ச மாதிரி, எந்தப் படமும் சமீபத்தில் என்னைப் பாதிக்கலை!”

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © FilmchipZ - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -